கோவை
அஇஅதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்… தொண்டர்களின் கட்சி அதிமுக!” – முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி பேட்டி!
அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதில் தவறில்லை; அவர் நல்ல கருத்தைத்தான் தெரிவித்துள்ளார்” என முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுகவின் 55-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, கோவை அண்ணா சிலை அருகே உள்ள அதிமுக இதய தெய்வம் மாளிகையில் கட்சியினர் சார்பில் நிறுவன தின விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, முன்னாள் அமைச்சர்கள் செ.மா. வேலுச்சாமி, தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர். ஜெயராம் மற்றும் அதிமுக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அண்ணா சிலை வரை சென்றனர். அங்கு பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, இதய தெய்வம் மாளிகையில் அதிமுக கொடியேற்றி, கேக் வெட்டி நிறுவன தினத்தைக் கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமியிடம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்த கருத்து குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “எஸ்.பி. வேலுமணி ஒன்றும் தவறாகக் கூறவில்லை. நல்லதைத்தான் சொல்லியிருக்கிறார். இதனை நீங்கள் குழப்பாமல் இருந்தால் நல்லது. அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” என்றார்.
மேலும், அதிமுக கடந்த காலங்களில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், தங்களது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் கட்சிக்காகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தமிழக வெற்றிக் கழக அரசு, மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை என சே.மா. வேலுச்சாமி விமர்சித்தார். சினிமா படப்பிடிப்பு நடத்துவது போன்று பல்வேறு இடங்களுக்கு வந்துவிட்டுச் செல்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்கள் சொத்துக்காகவும் பதவிக்காகவும் கட்சியில் இருப்பவர்கள் அல்ல எனக் குறிப்பிட்ட செ.மா. வேலுச்சாமி, அதிமுக தொண்டர்களின் கட்சி என்றும், தொண்டர்களின் விருப்பமே முக்கியம் என்றும் தெரிவித்தார்.