அச்சிறுப்பாக்கம், அக். 17:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 76 மதூர் ஊராட்சியில், மின்மாற்றியைச் சுற்றி அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்துள்ளதால் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எலப்பாக்கம் துணை மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டகயப்பாக்கம் எஸ்.எஸ்.5 மின் பகிர்மானப் பிரிவின் கீழ், மதூர் ஊராட்சி காலனி தெருவில் மின்மாற்றி ஒன்று செயல்பட்டு வருகிறது. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த மின்மாற்றியைச் சுற்றிலும் தற்போது அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாகக் கூறும் பொதுமக்கள், இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக மின்மாற்றியைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, மின்மாற்றியை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், மின்தடை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான மின்சார விநியோகத்தையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.