தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சோமனூத்து கிராமத்தில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே, இ.ஆ.ப., அவர்கள் இன்று (அக். 17) திறந்து வைத்து பார்வையிட்டார்.
சாந்தி ஃபீட்ஸ் தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன், திருப்பூர் மாவட்ட நலச்சங்கம் வாயிலாக இப்புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடம் சோமனூத்து கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
புதிய அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், ஸ்மார்ட் டிவி, வண்ண ஓவியங்கள் மற்றும் சிறு பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வசதிகள் குழந்தைகளின் கல்வி ஆர்வத்தை அதிகரிப்பதுடன், அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் நல மேம்பாட்டிற்கும் பயனுள்ளதாக அமையும்.
அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திட்டங்கள், கிராமப்புறங்களில் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்நிகழ்ச்சியில், சாந்தி ஃபீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். லக்ஷ்மணன், இணை நிர்வாக இயக்குநர் எல். சரவணன், பொதுமேலாளர் குணசேகரன், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.