தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் மதுரையில் உள்ள
மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்.
மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கொடயேற்றி வைத்து வரவேற்புரை ஆற்றினார். இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர்
களான டேவிட் ராஜன், சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் தா.கணேசன் வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார். துணைப்பொதுச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் சங்கத்தின் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தும், கூட்டப் பொருள்களின் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தும் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் உரை யாற்றினார்.
தமிழ்நாடு முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் காலை உணவுத்திட்டப் பணிகளில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்தி, கற்பித்தல் பணியைப் பாதிக்கும் வகையில் அதற்கு பொறுப்பு ஆசிரியர்கள் நியமிப்பதை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்.
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்ற அனைவரையும் பணிவிடுவிப்புச் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் மாநில தணிக்கைப் பிரிவு அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு தணிக்கைக்கு வரும் அலுவலர் கள் கையூட்டுத் தராதவர்களுக்கு தவறான தணிக்கைத் தடைகள் விதிப்பதும், அத்தணிக்கைத் தடைகளை மாநில தணிக்கைப் பிரிவு அலுவலகத்தில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு ரத்து செய்து ஆணை வெளியிடுவதும், கையூட்டுத் தராதவர்களுக்கு ரத்து செய்ய மறுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடக்கக்கல்விதுறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கும் வகையில் கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்
பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மறுத்து மேல்முறையீடு செய்து ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அலைக்கழிக்கும் போக்கை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து செய்து வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் 2026 நவம்பர் மாதத்தில் தொடர் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநில செயற்குழுவில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.