மதுரையில் பள்ளி, கல்லூரிகளில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டிலன் ஜெஸ்டின் தலைமையில் நடைபெற்ற நடை பயணத்தை, மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ச. வேல்தேவா, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை மாவட்டத் தலைவர் பா. பாண்டி ஆகியோர் உரையாற்றினர்.
பைக்காராவில் தொடங்கிய நடைப்பயணம் பழங்காநத்தம், ஜீவா நகர், சுப்பிரமணிய
புரம், டி.எம். கோர்ட், மேலமாசி வீதி, ஆறுமுச்சந்தி, தைக்கால், தைக்கால் பாலம், தேனி ஆனந்தம், மதிச்சியம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் நிறைவடையும் வகையில் ஏற்பாடு செய்யப்
பட்டிருந்தது. இந்த நடை பயணத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துரைப்பதும், மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதும் இந்த நடை பயணத்தின் நோக்கமாகும். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீண்டகாலமாக தொடர்வதாகவும், ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வகங்கள் மற்றும் நூலகங்களின் குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சனைகளால் மாணவர்
களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மாணவர்கள் கல்வி கற்கத் தேவையான குடிநீர், கழிப்பறை, காற்றோட்டமான வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவதுடன், அனைத்துப் பள்ளிகளிலும் தரமான கல்வி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
மதுரையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும்.தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரையில், மாநகருக்குள் மாணவர்கள் எளிதில் சென்று பயிலும் வகையில் அரசு கல்லூரி இல்லாத நிலை நீடிப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். இதனால் மாணவர்கள் மேலூர், கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், தனியார் கல்வி நிறுவனங்களில் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற நடை பயண பிரச்சார நிறைவு நிகழ்ச்சிக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் குரு கணேஷ் தலைமை வகித்தார்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடேசன், மூட்டா மாநிலப் பொதுச் செயலாளர் பேராசிரியர் செந்தாமரைக்கண்ணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் டேவிட் ராஜதுரை நிறைவுரையாற்றினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் தீபலெட்சுமி நன்றி கூறினார்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் துணை செயலாளர்கள் ரெய்ஹன் சுமன், ராதேஷ்யாம் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தினேஷ், திருப்பிரகலாதன், உம்மா ஹராபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பது, கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிகளை உறுதி படுத்துவது, ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவது, மதுரையில் அரசு கல்லூரி அமைப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடை பயணம் நடைபெற்றது.