தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் மாநில துணைத் தலைவர் பூக்கடை எஸ்.ஆனந்த் கூறியதாவது:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய அல் உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு நீண்ட நாள் பரோல் வழங்கியுள்ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவே தோன்றுகிறது. உளவுத்துறையும், காவல்துறையும் துரிதமாக செயல்பட்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.
திண்டுக்கல்லில் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட்டுவிட்டு திரும்பியவர் கொல்லப்பட்ட சம்பவம், சிவகங்கையில் ஜாமீனில் வெளிவந்த மதன் என்பவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் என அடுத்தடுத்து நடக்கும் குற்றச் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் முறையாகக் கண்காணிக்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
வேதாரண்யம் பகுதியில் த.வெ.க. நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு போதைப் பொருள் உற்பத்தி மையமாக மாறும் நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் தனது துறையில் கூடுதல் கவனம் செலுத்தி, மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்