காஞ்சிபுரம், அக். 21: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரையிலான மழலைக் குழந்தைகளைப் பெற்றோர்கள் புத்தாடை அணிவித்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள சரஸ்வதி தேவி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளர் அருண்குமார் குழந்தைகளைத் தனது மடியில் அமரவைத்து, அவர்களின் பிஞ்சு விரல்களைப் பிடித்து அரிசியில் தமிழ் எழுத்தான ‘அ’ எழுதி கல்விப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
விஜயதசமி நாளில் கல்வியைத் தொடங்குவது சிறப்பானதாகக் கருதப்படுவதால், பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்தனர். மழலைக் குழந்தைகள் அரிசியில் முதல் எழுத்தை எழுதிய அழகிய தருணத்தைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, பள்ளியில் மாணவர் சேர்க்கையும் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் ரமேஷ், முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.