கால்நடைகளின் உடல்நலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை – கழிவுகளைக் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம்–சுருளிப்பட்டி சாலையில் உள்ள சின்ன வாய்க்காலில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி, தண்ணீர் மாசடைந்ததைத் தொடர்ந்து, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
அவருடன் கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் இணைந்து வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றினர்.
ஓராண்டாக நீடித்த அவலம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் தண்ணீர், இந்தச் சின்ன வாய்க்கால் வழியாக வீரப்ப நாயக்கன் குளத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இப்பகுதியின் நீர்வளப் பாதுகாப்பிலும் இந்த வாய்க்கால் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சின்ன வாய்க்காலில் பழைய துணிகள், மதுபாட்டில்கள், இறந்தவர்கள் பயன்படுத்திய போர்வைகள், தலையணைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் வீசப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி, தண்ணீர் கருமை நிறமாக மாறியதுடன், கடும் துர்நாற்றமும் வீசியது.
இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வாய்க்காலைச் சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிகாலையில் தூய்மைப் பணி
இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 6 மணியளவில் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு எம்.எல்.ஏ.வும் நேரடியாகக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
எம்.எல்.ஏ. வேதனை
இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறியதாவது:
“நான் கம்பம் நகரைச் சேர்ந்தவன். எனது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் சின்ன வாய்க்காலில் குளித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், இன்று அந்த வாய்க்கால் மாசடைந்து கிடப்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வாய்க்காலில் தேங்கியுள்ள அசுத்தமான நீரைக் கால்நடைகள் பருகுவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதுடன், நீர்நிலையைப் பாதுகாக்கும் நோக்கிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
வாய்க்காலில் இறங்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது. இருப்பினும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம்.
சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலில் பொதுமக்கள் மீண்டும் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். வாய்க்காலைத் தொடர்ந்து பராமரிக்கவும், அதில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்” என்றார்.
கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
இந்தத் தூய்மைப் பணியில் தமிழக வெற்றிக் கழக தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யர், மாவட்டப் பொருளாளர் கௌதம், கம்பம் ஒன்றியச் செயலாளர் ரஞ்சித், உத்தமபாளையம் ஒன்றியப் பொறுப்பாளர் தனசேகரன், கம்பம் நகரச் செயலாளர் சதீஷ் மற்றும் நகரப் பொறுப்பாளர்கள் செந்தில்குமார், ரவி, செந்தில் ராஜா, திவாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.