மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
காயல்பட்டினம், அக். 21:
சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளைத் தடுக்க சர்வதேச நீதித்துறை அமைப்புகளும், உலகளாவிய மனித உரிமை அமைப்புகளும் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கதேசத்தைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள ஒரு மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் 14ஆம் தேதி இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மெக்கா நகரில் உள்ள மசூதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், குற்றச்சாட்டின் தன்மையைப் பொருட்படுத்தாமல், ஒருவரின் உயிரைப் பறிப்பதே தீர்வாக இருக்க முடியாது. பல்வேறு வழக்குகளில் மரண தண்டனை குறைக்கப்படுவதும், குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதும் நடைமுறையில் இருக்கும்போது, இந்த இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு நாட்டில் கைது செய்யப்படும்போது, அவர் சார்ந்த நாட்டின் தூதரகத்திற்கோ அரசாங்கத்திற்கோ தகவல் தெரிவிப்பது முக்கியமான நடைமுறையாகும். அவ்வாறு இருக்கையில், இந்த இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக வங்கதேச அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்களுக்கு உரிய தூதரக உதவிகளும் சட்டரீதியான பாதுகாப்புகளும் வழங்கப்பட்டனவா? என்ற கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும்போது, அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பும் நியாயமான விசாரணையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குற்றங்களைத் தடுப்பதற்காக மரண தண்டனை நிறைவேற்றுவது மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்ற அணுகுமுறையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மனித உயிரைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு நாட்டின் சட்டங்கள் எவ்வாறு இருந்தாலும், மனித உயிரின் மதிப்பும் அடிப்படை மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மரண தண்டனை என்பது மீண்டும் சரிசெய்ய முடியாத தண்டனையாகும். எனவே, இத்தகைய தண்டனைகள் தொடர்பாக சர்வதேச அளவில் உரிய கவனமும் கண்காணிப்பும் அவசியமாகிறது.
ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதித்துறை அமைப்புகள் மற்றும் உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உயிர் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.