பைக் ரேஸ், கார் ரேஸ் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்த அரசுக்கு கோரிக்கை

சென்னை: தாய்லாந்தில் நடைபெற்ற BRIC சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் கமல், 400 சிசி பைக் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து கத்தாரில் நடைபெற்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் 300 மோட்டார் சைக்கிள் ரேசிங் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தாய்லாந்தில் அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற BRIC சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் சென்னை சேர்ந்த கமல் கலந்து கொண்டு, 400 சிசி பைக் பிரிவில் முதலிடம் பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இதேபோல், கத்தாரில் நடைபெற்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் 300 மோட்டார் சைக்கிள் ரேசிங் போட்டியிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட கமல், இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தினார்.

இரு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிகளுடன் நாடு திரும்பிய கமல், மும்பை வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல் கூறுகையில், “தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் தற்போது முன்னிலையில் இருக்கிறேன். அடுத்த மாதம் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

மேலும், நாடு விட்டு நாடு சென்று போட்டிகளில் பங்கேற்கும்போது உணவு உள்ளிட்ட சில விஷயங்களில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் போட்டிகளை ஒருங்கிணைத்து ஒரே நிகழ்வாக நடத்தினால், அது மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்றும், இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் தன்னைப் போன்ற வீரர்களுக்கு அது ஊக்கமளிப்பதுடன், மோட்டார் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும் உதவும் என்றும் தெரிவித்தார்.

மோட்டார் விளையாட்டுப் போட்டிகளுக்கு உரிய ஆதரவும் ஊக்கமும் கிடைக்கும் வகையில், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என கமல் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *