தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான தேவதர்ஷன், யுவனேஷ் மற்றும் மாணவிகள் பூஜா, குஷி ஆகிய நான்கு சிறுவர், சிறுமிகள், கடந்த மாதம் தங்களது வீடுகளுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திருநீர்மலை பெரிய ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உயிரிழந்த சிறுவர், சிறுமிகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்பேரில், உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் வீதம் அரசு நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார், உயிரிழந்த சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களை நேரில் அழைத்து, தலா ரூ.3 லட்சத்திற்கான நிவாரணக் காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சரண்யா, தாம்பரம் கோட்டாட்சியர் வெங்கடாசலம், பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.