பேராவூரணி, அக்.23-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, புனல்வாசல் கிராமத்தில் நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்தேறியுள்ளது. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி, மரணத்திலும் மனிதநேயத்தை நிலைநாட்டியுள்ளனர்.
புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஏ.தனிஸ்லாஸ் மகளும், ஆரோக்கியசாமியின் மனைவியுமான புனிதா ஜெயசீலி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த அக்டோபர் 13ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி, அக்டோபர் 20ஆம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த துயரச் செய்தி அவரது கணவர் ஆரோக்கியசாமி, மகன் அக்ஷன், மகள் நிஷி ஜாலா ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டது.
தாயை இழந்த தாங்க முடியாத சோகத்திலும் அந்தக் குடும்பம் மனிதநேயமிக்க முடிவு ஒன்றை எடுத்தது. மூளைச்சாவு அடைந்த புனிதா ஜெயசீலியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.
இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது கல்லீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகங்கள், கணையம், கருவிழிகள், நுரையீரல், இதய வால்வு ஆகிய 8 உறுப்புகள் அகற்றப்பட்டு, உறுப்பு மாற்றுக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தான் மறைந்தாலும் பல உயிர்களின் உடலில் வாழ்ந்து கொண்டிருப்பார் புனிதா ஜெயசீலி.
இந்நிலையில், அவரது உடல் பிறந்த ஊரான புனல்வாசலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், அரசு சார்பில் பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அகத்தியன், திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடலுக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினர்.
தங்களது இக்கட்டான சூழலிலும் மனமுவந்து உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினரும், வட்டாட்சியரும் நெகிழ்ச்சியுடன் ஆத்மார்த்தமான மரியாதையை தெரிவித்தனர். இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமான செயல் என அவர்கள் பாராட்டினர்.
தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான உறவினர்கள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், மருத்துவர் துரை.நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பேராவூரணி நீலகண்டன் .