தூத்துக்குடி, அக். 24-
சட்டம்-ஒழுங்கு சீர்கேடால் தமிழகம் முற்றிலும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது. தவெக வழங்குவது ஆட்சியா… க்ரைம் த்ரில்லர் படமா? என கேட்கும் அளவுக்கு குற்றச்சம்பவங்கள் அரங்கேறுவதால் நெஞ்சம் பதைபதைப்பதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


தவெக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், இரட்டைக் கொலைகள், சிறுமிகள் துன்புறுத்தல் என முற்றிலும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருகிறது. தவெக வழங்குவது ஆட்சியா… க்ரைம் த்ரில்லர் படமா… இது தமிழ்நாடா.. உத்தரப்பிரதேசமா.. எனக் கேட்கும் அளவுக்கு அடுத்தடுத்து குற்றச் சம்பவங்கள் அரங்கேறுவதால் நெஞ்சம் பதைபதைக்கிறது!


வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தவெக நிர்வாகியால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிற பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். இதில் அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்து கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.


அதேபோல, தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பெருங்குற்றங்களுக்குப் பின்னாலும் ஆளும் தவெகவினர் ஒளிந்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர் தவெக எம்எல்ஏ, போதைப் பவுடர் பயன்படுத்துபவர் தவெக அமைச்சர், போதை மாஃபியா தவெக மாவட்டப் பொறுப்பாளர். போதை மாஃபியாவுக்கு உடந்தையாக இருப்பவர் மாவட்டச் செயலாளர். தற்போது குமரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர் தவெகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர். 137 கிலோ போதைப் பொருள் விற்றவர் நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர் பூபாலன்.முன்பெல்லாம் ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்றுதான் பதாகைகள் வைப்பார்கள். இப்போது ‘தவெகவினர் ஜாக்கிரதை’ என வைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. சீன்பேப்பர் பார்த்துப் படித்து நடித்துவிட்டுச் செல்ல, இது ஷூட்டிங் ஸ்பாட் அல்ல. ஆட்சி!


தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையை அமைத்தார் முதல்வர் விஜய். சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போல, தமிழ்நாட்டில் பெண்களும் சிறுமிகளும் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிவரும் சூழலில் அந்த படையே காணாமல் போய்விட்டது. எனவே தனிப்படை ஒன்றை அமைத்து சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்துகிறேன்! இவ்வாறு கூறி உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *