வன வேங்கை கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாமக்கல், அக். 26:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, வன வேங்கை கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம், வெப்படை மற்றும் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எழுச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலருக்குச் சொந்தமாக வீடோ, குடியிருப்பு நிலமோ இல்லாத நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மீண்டும் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, குறவர் இன மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தகுதியான பயனாளிகளுக்கு எவ்வித தாமதமுமின்றி இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வன வேங்கை கட்சியின் தலைவர் இரணியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.
இதன் பின்னரும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இன மக்களை ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று வன வேங்கை கட்சியின் தலைவர் இரணியன் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.