தூத்துக்குடி: போல்டன்புரம் முதலாவது தெருவைச் சேர்ந்த கதிரவன், தனியார் நிதி நிறுவனம் மூலம் கார் வாங்கி 20 மாதங்கள் தவணை செலுத்திய நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக தவணை செலுத்தாததால் நிதி நிறுவனத்தினர் தரக்குறைவாகப் பேசி மன உளைச்சல் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 15ஆம் தேதி விஷம் அருந்திய கதிரவன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 18ஆம் தேதி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, கதிரவனின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கதிரவன் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளையும் விமர்சித்தார். இந்நிகழ்வின்போது மாநகராட்சி உறுப்பினர்கள் நிர்மல்ராஜ், முத்துவேல், கனகராஜ், சமூக ஆர்வலர் பிரதீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.