வடலூர், அக்.27:
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சாலை ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வடிய வழியின்றி சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளன. பள்ளி மாணவர்கள், பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் தவிக்கின்றனர்.எனவே வடலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வடிகாலை சீரமைத்து நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.