வடலூர், அக். 27:
கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில், கிருஷ்ணா பேக்கரி எதிரில் தனியார் பேருந்துகள் டைமிங் பிரச்சினை காரணமாக சாலையில் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொள்ளும் வகையில் ஆபத்தான முறையில் இயக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
SRI VINAYAGA (SVBS) மற்றும் PROGRESS TRANSPORT (PCP) ஆகிய இரு தனியார் பேருந்துகள் சாலையின் நடுவே போட்டி போட்டுக்கொண்டு நிறுத்தப்பட்டதால், பண்ருட்டி – கடலூர் மார்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் டீ குடித்தபடி பேருந்தை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் சிக்கி கடும் அவதிக்குள்ளானார்கள். பின்னால் கார், லாரி, இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவலர்கள், கடலூர் மாவட்ட காவல்துறை தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
வடலூர் போன்ற முக்கிய சந்திப்பில் இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.