நாமக்கல், அக். 27:

குமாரபாளையம் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பாட்டுச் சாலையை மீட்டுத் தர வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுபாலனிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டத்துக்கு உட்பட்ட களியனூர், சுண்டக்காடு, அஞ்சுகம் நகர், பசங்காடு, மணல்காடு உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மின்சாரம், சாக்கடை, கழிப்பறை வசதிகள் மற்றும் தார்ச்சாலைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில், களியனூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் தார்ச்சாலையைத் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, வேளாண் நிலமாக மாற்ற முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த நிலம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் என்றும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட சாலையைத் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, தொடர்ந்து மக்கள் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மதுபாலனிடம் அளித்த மனுவில் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *