தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் விளைநிலங்களை வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ அறிவுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு பாசனத்தின் மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஒரு காலத்தில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வருடத்திற்கு இரண்டு போகம் மட்டும் தான் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து தேனி மாவட்டத்தில் தான் அதிக அளவில் நெற்பயிர்கள் விளைவிக்கப்படுகிறது அதனால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி நெல் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்கூடங்களாகவும் மாற்றப்பட்டு வருவதால் விவசாய செய்யும் பரப்பளவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறியது

தஞ்சை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெற்களஞ்சியமாக விளங்கும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கம்பம், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் வீரபாண்டி பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலை நீடிக்கிறது.

விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அதிகாரிகள் எவ்வாறு அனுமதி அளிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே இதுபோன்று அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றை மறுபரிசீலனை செய்து, விவசாய நிலங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் எக்காரணம் கொண்டும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. இதனை மீறிச் செயல்படுபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *