கோவை

தேனியில் சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 4 பேர் கைது – பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து சிறைத்துறை டிஜிபி தலைமையில் ஆய்வு: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி…

கோவை விமான நிலையத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தேனியில் சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளைப் பிடிக்க இரவு முதல் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்டச் சிறையிலிருந்து கைதிகள் தப்பியுள்ள நிலையில், சிறையில் ஏதேனும் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்திருந்தால், சிறைத்துறை டிஜிபி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தொடர்பான விவகாரத்தில், அவர் அதிகாலை 1.30 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், ஒரு கோப்புக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கட்சிக்கு நிதி பெற்றதாகக் கூறப்படும் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது திமுகவுக்கு அவமானம் என்று விமர்சித்தார்.

குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாகச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், ஒரே ஆண்டில் ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்றும் விமர்சித்தார்.

கரூரில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் பேசியது தொடர்பாகவும், அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளர்கள் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், ஒவ்வொரு சான்றிதழ் வழங்கும் நடைமுறையிலும் தவறுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கோவையில் மாணவர் உயிரிழந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், இந்த வழக்கில் யாருடைய தலையீடும் இல்லை என்றும், விசாரணை சுதந்திரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மின்சாரத் துறை தொடர்பாகப் பேசுகையில், மின்சாரத் துறை குறித்து சிலர் திட்டமிட்டு தவறான கருத்துகளைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டினார். மின் கட்டணத்தைச் சீராய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாகக் கூறுவது தவறான தகவல் என்றும் தெரிவித்தார். தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி சுமார் 5,300 மெகாவாட் மட்டுமே என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *