9 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
கோவை: இந்தியா – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி – 2026-ல் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த ஜே.கே.டி.சி. (JKTC) அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த சர்வதேசப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட கோவை அணியினர், 9 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களைக் கைப்பற்றி கோவைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகளில் தங்களது திறமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றியுடன் கோவை திரும்பிய அணியினருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்களுடன் வந்த வீரர், வீராங்கனைகளை அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டினர்.
அணியின் தலைமைப் பயிற்சியாளர் சிரில் வினோத் மற்றும் பயிற்சியாளர்கள் கோகுலகிருஷ்ணன், சஞ்சய் ஆகியோருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளர் சிரில் வினோத் கூறுகையில், “சர்வதேச அளவிலான போட்டியில் கோவை அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி, இளம் தலைமுறையினரிடையே கராத்தே மற்றும் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்” என்றார்.
சர்வதேசப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றியுள்ள கோவை ஜே.கே.டி.சி. அணியினரின் சாதனை, விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.