கடலூர், அக். 30:
கடலூர் மாவட்டம், இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வத்தையும், இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் ஆற்றலையும் வளர்ப்பது தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாகும். இதனைச் செயல்படுத்தும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சிப் பாசறையின் வாயிலாக தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள், அதன் வளர்ச்சி மற்றும் இளைய தலைமுறையினரிடையே இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
மேலும், மாணவ, மாணவியர்கள் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்பதன் மூலம் தங்களது மொழித்திறன், சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையின் முக்கிய நோக்கம் இளைய தலைமுறையினரிடம் தமிழ் மொழி மீதான பற்றையும், இலக்கிய அறிவையும், படைப்புத் திறனையும் வளர்ப்பதாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.