கரூர்: கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 44-வது ஆண்டு விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கே. பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலாளர் கே. பெரியசாமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வரும், தேசிய விருது பெற்றவருமான வி. பழனியப்பன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, தயான் சந்த் விருது 2020 பெற்றவரும், சர்வதேச பாரா தடகள வீரரும், தேசிய விருது பெற்ற விளையாட்டுப் பயிற்சியாளருமான மதுரையைச் சேர்ந்த ஜே. ரஞ்சித் குமார் கலந்து கொண்டார். மேலும், கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் ஜே. டேவிட் டேனியல் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
விழாவின் தொடக்கமாக தேசியக் கொடியேற்றம், ஒலிம்பிக் கொடியேற்றம், உறுதிமொழி ஏற்பு, ஒலிம்பிக் ஜோதி வருகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து விளையாட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி நிகழ்ச்சிகள், மாணவர்களின் பிரமிடு சாகசம், யோகா நிகழ்ச்சி, அணிவகுப்பு மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
மாணவர்களின் தனித்திறன், ஒற்றுமை, தன்னம்பிக்கை மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் விழா அமைந்திருந்தது. விளையாட்டின் மூலம் மாணவர்களின் உடல் நலம், மனவலிமை, ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதன் அவசியம் இவ்விழாவில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர். நளினிப்ரியா நன்றியுரையாற்றினார்.