தேனி மாவட்டம் கம்பம் உழவர் சந்தையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்காகத் தனியாக அமைக்கப்பட்ட இயற்கை காய்கறி அங்காடியை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ திறந்து வைத்தார்.
கம்பம் உழவர் சந்தையில் 70-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களுக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும் வகையில் இந்தத் தனி அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசும்போது, விவசாயிகள் காய்கறிப் பயிர்களுக்கு அதிக அளவில் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை முறையில் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். இதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளனர். அவர்களிடம் உரிய ஆலோசனைகளைப் பெற்று, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு நச்சுத்தன்மையற்ற ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைக்கும்.
இதற்காகவே கம்பம் உழவர் சந்தையில் இயற்கை காய்கறி அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த அங்காடியில் விற்பனை செய்யப்படும் இயற்கை காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் செல்ல வேண்டும்மேலும், கம்பம் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், உத்தமபாளையத்திலும் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தேனி தென்மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பார்த்திபன் மற்றும் பலர் உடன் இருந்தனர்