பேராவூரணி, நவ- 1 –
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி உதவித்தொகை திட்டத்திற்கான (NMMS) தேர்வு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி அறிவுறுத்தலின் பேரில், பேராவூரணி வட்டார மாணவ, மாணவிகளுக்கு பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் வட்டார மாணவ, மாணவிகளுக்கு பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
குமரப்பா பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சர்மிளா தலைமை வகித்தார். அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு என்.எம்.எம்.எஸ் பொறுப்பு ஆசிரியர் தீபா தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளிடையே தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், “மாணவச் செல்வங்களே, தேர்வைக் கண்டு ஒருபோதும் அஞ்சக் கூடாது. பதற்றத்துடன் தேர்வை எதிர்கொள்ளக் கூடாது. தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மனம் தளரக் கூடாது; அதனை அடுத்த தேர்வுக்கான பயிற்சியாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உழைப்பும், விடாமுயற்சியும் நிச்சயம் வெற்றியைத் தரும். கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்க உழையுங்கள்.
தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் படிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். எனவே, மாணவர்கள் கவனமாகப் படித்து தேர்வெழுதி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
நிகழ்ச்சியில் பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா கல்விக் குழுமத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.
இதில் பள்ளித் துணை ஆய்வாளர் (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்) மாதவன் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
பேராவூரணி நீலகண்டன் .