கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சண்டன் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் எல்.இ.ஜோதிமணி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புகையிலை தடுப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது,
கிராமசபை கூட்டம் மக்களின் அடைப்படை தேவைகள், வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்களை கலந்தாலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. கிராம ஊராட்சியில் சொல்லக்கூடிய வழிமுறைகளை தவறாது நீங்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அரசு எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவை கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், 15வது நிதிக்குழு மான்ய திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், உபரி நிதி திட்டம், பிரதம மந்திரி திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், விபிஜி ராம் ஜி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கத் திட்டம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், சுகாதார மற்றும் கழிவு மேலாண்மை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் போன்ற பல்வேறு கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த ஆக்கப்பூர்வமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சண்டன், ஆயங்குடி, மேலக்கடம்பூர், சிறுகாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதில் சாலைகளின் திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேரடியாக செய்யக்கூடிய பணிகளை விரைந்து தொடங்கவும், மற்ற பணிகளுக்கு அரசின் ஒப்புதல் பெற்றும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மனைபட்டா வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை மூலம் மனைப்பட்டா வழங்கிட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிப்பறை மற்றும் விளையாட்டு மைதான வசதிகள் போன்ற பணிகள் முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்படும். சண்டன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க பேவர் பிளாக்தளம் அமைத்தல், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், சிமெண்ட் சாலை மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில் கல்வெட்டு அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி காலை உணவுத் திட்டம் நடுநிலைப்பள்ளி வரை விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். சுபநிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகை காலங்களில் தொடர் விடுப்பு எடுப்பதையும், 10-ஆம் வகுப்பிற்குப் பின் பள்ளிக்கு வராமல் தேர்வு நேரத்தில் மட்டும் வருவதையும் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் உயர் கல்வி கற்று நல்ல நிலையை அடைய பெற்றோர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். தங்கள் குழந்தைகளின் தடையற்ற வளர்ச்சிக்கு ஆரம்பகால ஊட்டச்சத்து மிகவும் அவசியமாகும். குழந்தைகளுக்கு டீ, பிஸ்கட் போன்றவற்றை அதிகம் கொடுப்பதை தவிர்த்து பழங்கள், கீரைகள், முட்டை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும்.
அதேபோல், கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ காலத்தில் போதிய எடையுடன், ஆரோக்கியமும் பேண வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எடை குறைவான குழந்தைகள் பிறப்பையும் தவிர்க்க முடியும். எனவே பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சிப் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சிதம்பரம் சார் ஆட்சியர் இரா. வெங்கடேஷ்வரன்
ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பாலகணேஷ், உதவி இயக்குநர் ஊராட்சிகள் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.