காயல்பட்டினம், நவ.2
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள சோட்டையன்தோப்பு பகுதியில் பாலமுருகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகனின் உறவினர் இல்லத்தில் நடைபெற்ற நீராட்டு விழாவிற்காக டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த சிலர், பேனர் வைப்பது தொடர்பாக பாலமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தை மனதில் வைத்துக்கொண்டு, மறுநாள் காலையில் பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்த பாலமுருகனை ஒரு கும்பல் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளது. இச்சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
உயிரிழந்த பாலமுருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு நபர்களையும் உடனடியாகக் கைது செய்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளனவா, அவர்கள் கூலிப்படையுடன் தொடர்புடையவர்களா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி, இக்கொலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
பாலமுருகன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். சாதாரண பேனர் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்காக ஒருவரைப் படுகொலை செய்யும் அளவிற்குக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குற்றவாளிகளுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பிணையில் வெளிவந்தவர்களை காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். மேலும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.