கடலூர், நவ. 03:
கடலூர் மஞ்சக்குப்பம் நகர அரங்கம் அருகே, புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 4.0 விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் 02.11.2026 அன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NTCP) கீழ் ஆண்டுதோறும் 60 நாட்கள் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 4.0, 28.10.2026 முதல் 26.12.2026 வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், இளைஞர்களிடையே புகையிலைப் பயன்பாடு தொடங்குவதைத் தடுப்பது, புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதை ஊக்குவிப்பது மற்றும் புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
இதற்காக பொது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்வி நிறுவனங்களைப் புகையிலை இல்லா நிறுவனங்களாக உருவாக்குதல், புகையிலை இல்லா கிராமங்களை உருவாக்குதல், புகையிலைத் தடுப்புச் சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்துதல், சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கேற்பை உறுதி செய்தல் என ஆறு முக்கிய உத்திகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்விழிப்புணர்வுப் பேரணியில் பெரியார் அரசு கலைக் கல்லூரி, சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, சி.கே. கல்லூரி மற்றும் புனித வளனார் கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் புகையிலைப் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
மஞ்சக்குப்பம் டவுன் ஹால் பகுதியில் தொடங்கிய இப்பேரணி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு புகையிலை இல்லா உறுதிமொழியினை (Tobacco-Free Pledge 4.0) ஏற்றுக்கொண்டனர்.
இப்பேரணியின் மூலம் இளைஞர்களிடையே புகையிலைப் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, புகையிலை இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், காசநோய் பிரிவு துணை இயக்குநர் கருணாகரன், புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர் அபிநயா, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.