மன்னார்குடி., நவ.02-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது..கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், மேகதாது அணையைக் கட்டி மாண்டியா மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்குப் பயன்படுத்த உள்ளதாகவும், விரைவில் மத்திய அரசு, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக மேகதாது அணை கட்டப்படுவதாகக் கூறி வந்த நிலையில், தற்போது மாண்டியா மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காகவே அணை கட்டப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருப்பதன் மூலம் அதன் உண்மையான நோக்கம் வெளிப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க வேண்டும். கர்நாடக முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும். மேலும், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழகம், புதுச்சேரி அரசுகளின் ஒப்புதல் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்ட அறிக்கை சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் வகையில் மேகதாது அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திட்டமிட்டு தமிழக விவசாயிகளைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார். மேகதாது அணை கட்டுவதால் கர்நாடக விவசாயிகளுக்கே பயனில்லை என அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களின் நலனுக்காகவே அணை கட்டப்படுவதாகக் கூறுவது வேதனை அளிக்கிறது.
தொடர்ந்து பேசிய அவர், குத்தகை விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேளாண்மைத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் இயக்குநர் ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். குத்தகை விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்யும் வகையில் மத்திய அரசின் அனுமதியைப் பெற்று உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 2013 முதல் 2018 வரை ஏற்பட்ட பேரிடர்களால் குத்தகை பாக்கி நிலுவையில் இருந்ததைத் தொடர்ந்து, வருவாய் நீதிமன்றங்கள் மூலம் குத்தகை விவசாயிகள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், 2022ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குத்தகை விவசாயிகள் நில அபகரிப்பாளர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உரிய அங்கீகாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு இதுகுறித்து உடனடியாகக் கொள்கை முடிவெடுத்து, நீதிமன்றத்தில் உரிய விதிவிலக்கு பெற்று குத்தகை விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த வாரம் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷைச் சந்தித்தும் வலியுறுத்தியுள்ளேன். குத்தகை விவசாயிகளுக்கு உரிய அனுமதியும் அங்கீகாரமும் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் .