திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்று சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
எண்ணூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 110 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசையுடன் கூடிய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகத் திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 110 கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாரம்பரிய முறைப்படி நலங்கு வைத்து, மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும், புதிய புடவை, இனிப்புகள் மற்றும் ஏழு வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வளைகாப்புத் தொகுப்பும், பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட திட்ட அலுவலர் முத்துலட்சுமி செய்திருந்தார். குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் அருணா, மண்டல மருத்துவ அலுவலர் சீபா மற்றும் பெரம்பூர் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தல்லாடி நாகயோஜனவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் தல்லாடி நாகயோஜனவள்ளி நன்றி உரையாற்றினார்.
மேலும், மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தகுமார், மாவட்டப் பொருளாளர் எஸ்.ஜி. சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.