கோவை பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் நிறுவன தின விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் மற்றும் நிறுவன அறங்காவலரும் தலைவருமான ஜி. ஆர். கார்த்திகேயன் ஆகியோர் விழாவுக்குத் தலைமை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயதீபா வரவேற்புரை ஆற்றினார்.
கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி, செவிலியர் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் ஆற்றி வரும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், டெல்லியைச் சேர்ந்த இந்திய செவிலியர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் அன்னி குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில், செவிலியர் மற்றும் சுகாதாரத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கல்லூரியின் மூன்று முன்னாள் மாணவர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான சிறப்பு முன்னாள் மாணவர் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் பயிற்சியாளராகவும், தேசிய தர மதிப்பீட்டாளராகவும் பணியாற்றி வரும் கவிதா விஜய், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்றுநராகப் பணியாற்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ரம்யா, புதுச்சேரி ஜிப்மர் செவிலியர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் டாக்டர் வேம்பு ஆகியோர் விருது பெற்றனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர் டாக்டர் அன்னி குமார் பேசுகையில், செவிலியர் துறையில் தலைமைப் பண்பு, தரமான கல்வி, தொழில்முறை வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
விருது பெற்ற முன்னாள் மாணவர்கள் பேசுகையில், பி.எஸ்.ஜி கல்லூரியில் பெற்ற கல்வி மற்றும் பயிற்சிகள் தங்களது தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதாகக் குறிப்பிட்டனர். வேலைவாய்ப்புக்கான கல்வியுடன், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கும், ஆராய்ச்சித் துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் கல்லூரி வழிகாட்டியதாகத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.