சென்னை: கிண்டி கத்திப்பாரா அருகே உள்ள தி ராயல் லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில், இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில், ரோட்டரி மாவட்டம் 3234 சார்பில் ‘சௌர்ய சம்மான் – விருது பெற்றவர்களின் வீரத்தைப் போற்றுதல்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் வீரமிக்க ராணுவ வீரர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் நாட்டின் மீதான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பரம் வீர் சக்ரா, அசோக சக்ரா, மகா வீர் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா மற்றும் வீரத்திற்கான சேனா பதக்கம் உள்ளிட்ட உயரிய ராணுவ வீரதீர விருதுகளைப் பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் (OTA) தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ், PVSM, AVSM, VSM, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களைப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை திரு. வரதராஜனும் பங்கேற்றார். இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன், ஜம்மு காஷ்மீரில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் 44-வது பட்டாலியனில் அயற்பணியில் இருந்தபோது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்தார்.

நாட்டிற்காக அவர் ஆற்றிய வீரமிகு சேவையைப் பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால ராணுவ வீரதீர விருதான அசோக சக்ரா அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய திரு. வரதராஜன், தனது மகன் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்து அர்ப்பணித்த ராணுவ வீரர்களின் தியாகத்தையும், அவர்களது குடும்பத்தினரின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *