திருவொற்றியூர்,

மணலி புதுநகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனர்.

மணலி புதுநகர் அடுத்த விச்சூர், அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (50), அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மணலி புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில், தலைமை காவலர் தியாகராஜன் மற்றும் போலீசார் புருஷோத்தமன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடையை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது மாறுவேடத்தில் சென்ற போலீஸ்காரர் ஒருவர், மனோகரனிடம் ரூ.50 கொடுத்து ஹான்ஸ் பாக்கெட் கேட்டுள்ளார். அவர் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஹான்ஸ் பாக்கெட்டை வழங்கியபோது, போலீசார் கையும் களவுமாக அவரைப் பிடித்தனர்.

தொடர்ந்து கடையில் சோதனை நடத்தியதில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 17 கிலோ குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, மனோகரனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு ஹான்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி வந்து, அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *