தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். பள்ளியின் 63-வது ஆண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார்பள்ளியின் முன்னாள் மாணவர்களான டாக்டர்கள் மணிகண்டன், சரிதா, சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தாளாளர் எம்.எஸ். பிரபாகர் அனைவரையும் வரவேற்றார்

விழாவில், அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

விழாவில் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசியது

மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து கனவு காண வேண்டும். அந்தக் கனவை நனவாக்குவதற்கு விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

விடாமுயற்சி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் நான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அப்போது எனது தந்தை என்னை கம்பத்தில் இருந்து இந்தப் பள்ளிக்கு அழைத்து வந்து சேர்க்க முயற்சி செய்தார்.

ஆனால், குறைந்த மதிப்பெண் காரணமாக எனக்குப் பள்ளியில் சேர்க்கை கிடைக்கவில்லை.

அந்தச் சம்பவம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. நன்றாகப் படித்து, நான்கு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அன்றே உறுதி எடுத்துக்கொண்டேன்.

அந்த உறுதியுடன் தொடர்ந்து முயற்சி செய்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைத்தேன்.இன்று நான் சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்து, அன்று என்னைச் சேர்க்க மறுத்த இதே பள்ளியின் 63-வது ஆண்டு விழாவில் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.

இது எனது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.

எனவே, மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளையும் தடைகளையும் கண்டு துவண்டு விடக்கூடாது.குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்பதற்காகத் தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொருவரிடமும் தனித்திறமை இருக்கிறது.

அதை அடையாளம் கண்டு தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார் இந்த விழாவில் பள்ளியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *