திருவாரூர்.,
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்வைத்து மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகக் கூறி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைக் கண்டித்து மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை முன்வைத்து, பிள்ளையார் கோயில் உச்சியில் தீபம் ஏற்றாமல், சிக்கந்தர் தர்கா அருகே உள்ள அளவை கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற விவகாரம் மதப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட இணைச் செயலாளர் லெலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத வழிபாட்டு உரிமைகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை மத நல்லிணக்கத்துடன் அணுக வேண்டிய நிலையில், அவற்றை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி மக்களிடையே மதப் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் பன்முகத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கக் கூடாது என்றும், மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் போக்கைக் கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராக ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் ஆசாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் முரளி, குமரகுரு மற்றும் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.