அச்சிறுப்பாக்கம்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள சின்ன திருவண்ணாமலை என அழைக்கப்படும் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவலக் குழு சார்பில், பஞ்சதீபம் எனப்படும் பரணி தீப வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் வழிவிடு விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ வஜ்ரகிரி கிரிவலக் குழுப் பொறுப்பாளர்களான அச்சிறுப்பாக்கம் எஸ். செல்வம், பிரிங்கி மலை மு. சரவணன் ஆகியோர் தலைமையில், கைலாய மாமணி சிறுதாமூர் ரவி சுவாமிகள் முன்னிலையில் பஞ்சதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமங்கலிப் பெண்களுக்கு தாலிக்கயிறு, பூ, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அருள்ஜோதி, திருவண்ணாமலை திருக்குடைகள் டிரஸ்ட் நிர்வாகிகள் சங்கர், ராஜேந்திரன், லட்சலிங்கம், சுகுமார், சுரேஷ், சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான சிவபக்தர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பக்தி, ஆன்மிகம், சேவை ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடைபெற்ற இவ்விழா பக்தர்களிடையே மகிழ்ச்சியையும் ஆன்மிக உணர்வையும் ஏற்படுத்தியது.