பேராவூரணி நவ-24
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் மக்களின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.பி. நவநீதன் தலைமை தாங்கினார்.
முன்னதாக, பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து விவசாயிகள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூராங்குடி கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட விவசாயிகளின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும், தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், சொந்த நிலமில்லாத பட்டியலின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், ஏற்கனவே வழங்கப்பட்ட நிலங்களின் பட்டாக்களைச் சரிபார்த்து சாதி பாகுபாடின்றி பட்டா வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் தனிநபர் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும், பெருமகளூர் பெரிய ஏரி பாசனக் குழுத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேராவூரணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியனை நேரில் சந்தித்த விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன்தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி த.நீலகண்டன்