காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை பகுதியில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலில், ஆடிப்பெருக்கு, சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திகை தீபத் தீபத்திருநாளை முன்னிட்டும், கிருத்திகையை முன்னிட்டும் வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர். தீபத் திருநாளை முன்னிட்டு மூலவர் ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சமேத சுவாமிகளுக்கு பால் தயிர் சந்தனம் விபூதி பன்னீர் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து உற்சவமூர்த்தி முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு ஆடைகள் உடுத்தி, விண்மீன் ஆறு கோண ஷடாட்சர மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார். நிகழ்வில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ,சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வல்லக்கோட்டை கோட்டை ஆண்டவரை தரிசித்து வருகின்றனர். கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.