கார்த்திகை தீபத்திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…
திருத்துறைப்பூண்டி., நவ.25-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உலகப் புகழ்பெற்ற அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி ஆலயத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி பல்லக்கில் எழுந்தருளி ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தார். பின்னர் ஆலயத்தின் எதிரே அமைக்கப்பட்டிருந்த சப்பரத்தில் சுவாமி எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து காய்ந்த பனை மட்டைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சொக்கப்பனை கொளுத்தும் வழிபாடு தொன்றுதொட்டு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆன்மிக நிகழ்வாகும். சிவன், விஷ்ணு மற்றும் முருகப்பெருமான் ஆலயங்களில் கார்த்திகை தீபத்திருநாளன்று இவ்வழிபாடு சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள், செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.