திருத்துறைப்பூண்டி.,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 1,500 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி அடுத்த அம்மனூர், ஆதனூர், கீழ அம்மனூர், கொத்தங்குடி, பாமந்தூர், கோமல், திருத்தங்கூர், கீராலத்தூர், ஆண்டாக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரை நம்பி விவசாயப் பணிகளைத் தொடங்கிய நிலையில், போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அவ்வப்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் விதைகள் முளைத்து பயிர்கள் வளரத் தொடங்கின.

ஆனால், தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சுமார் 50 நாட்களான சம்பா இளம் பயிர்கள் வயல்வெளிகளில் கருகத் தொடங்கியுள்ளன. இதனால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து முழுமையாகப் பெற்று, விவசாயத்திற்கு உரிய நீரை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், நேரடி விதைப்பு பணிகளுக்காக ஏக்கருக்கு சுமார் ரூ.15,000 வரை செலவு செய்துள்ளதாகவும், தற்போது பயிர்கள் கருகி வருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது வறட்சி நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *