மன்னார்குடி.,

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து தனக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை என்றும், அரசியல் முடிவை உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் கட்டித்தர வேண்டும். மெதுவாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தை தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். மன்னார்குடி சுற்றுவட்டச் சாலைக்கு இந்த ஆண்டு சுமார் ரூ.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயப் பணிகள் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். டெல்டா மாவட்டங்களில், குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய குழு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

விவசாயிகளின் நிலையை ஆய்வு செய்ய திமுக அரசு குழு அனுப்பியிருப்பதை வரவேற்கிறோம். விவசாயிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஆளுங்கட்சியால் மட்டுமே மேற்கொள்ள முடியும். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினால் முதலமைச்சர் அதனை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக மன்னார்குடி தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடிந்தது. பாதாள சாக்கடை திட்டத்தை தரமாக நிறைவேற்ற முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கான சூழ்நிலை வரும்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுத்தான் இணைவேன். எந்தவித நெருக்கடியும் எனக்கு கிடையாது. எந்த நெருக்கடியும் என்னை கட்டுப்படுத்தாது. நான் ஒரு தனி எம்.எல்.ஏ. அரசியல் ரீதியாக முடிவெடுக்கும் போது அனைவரிடமும் தெரிவித்துவிட்டுத்தான் முடிவெடுப்பேன் என்றார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த விவகாரம் காவல்துறை விசாரணையில் உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் யாரும் தப்பிக்கக் கூடாது. சட்டம் தனது கடமையை சரியாக செய்யும் என நம்புகிறோம் என்றார்.

மன்னார்குடியை தூய்மையான நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய மாடமாளிகைகள், கோபுரங்கள் இல்லாவிட்டாலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவேன் என எஸ். காமராஜ் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *