“உச்சநீதிமன்ற தீர்ப்புகளை நிறைவேற்றாமல், தமிழக அரசு நெருப்போடு விளையாட வேண்டாம்,” என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், இந்த ஆண்டு தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும், தேவைப்பட்டால் மத்திய காவல் படையின் துணையுடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், மதுரை மாவட்ட ஆட்சியரும், மாநகர காவல் ஆணையரும் இணைந்து, 6,000-க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து, கடைசி நேரத்தில் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றியுள்ளனர். இது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். மேலும், அறங்காவலர் குழு அனுமதி வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் 28 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால், தங்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என கோவில் பட்டர்களும், அர்ச்சகர்களும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் முரண்பாடு இருப்பது தெரிகிறது.

தமிழக அரசுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கினால் அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஒவ்வொரு மாநில அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் போனால், நாளை காவிரி போன்ற பிரச்சனைகளுக்கு தமிழக அரசு எந்த தார்மீக அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும்? எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் தமிழக அரசு நெருப்போடு விளையாட வேண்டாம்.

அதேபோல், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் பிரிவு மூலம் குறுஞ்செய்தியின் மூலத்தை எளிதில் கண்டறிந்து, உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை அமைப்பது வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் செயலாகும்.
தமிழக மக்கள் 108 எம்.எல்.ஏ.,க்களை வெற்றி பெறச் செய்தது, முதல்வர் விஜய் மீது வைத்த நம்பிக்கையால்தான்.

ஒரு சட்டமன்ற உறுப்பினரைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படக்கூடாது. முதல்வர் விஜய்யை சுற்றியுள்ளவர்கள் சரியான ஆலோசனைகளை வழங்குவதாகத் தெரியவில்லை. குடியரசு தின வாழ்த்து தெரிவிப்பதோடு நின்றுவிடாமல், இந்திய அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் மதித்து நடக்க வேண்டும். கட்சியையும் ஆட்சியையும் விட மக்களும் சட்டமுமே முக்கியம் என்பதை உணர்ந்து, திருப்பரங்குன்றம் மற்றும் கள்ளக்குறிச்சி விவகாரங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *