காஞ்சிபுரம்: தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவரது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
தனது பிறந்தநாளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாட வேண்டும் என கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனை நிறைவேற்றும் வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடைச் சத்திரம் பகுதியில், காஞ்சி மாநகர திமுக இளைஞரணி சார்பில் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் ப.சுகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர் இலக்கியா சுகுமார் ஆகியோர் ஏற்பாட்டில், பூக்கடைச் சத்திரம் பகுதியில் உள்ள நான்கு சாலையோர சிற்றுண்டி மற்றும் தேநீர் கடைகளில் இன்று ஒருநாள் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, தூய்மைப் பணியாளர்கள், ஏழை, எளிய மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி மாணவர்கள், வெளியூர் பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோருக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் தேநீர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.
வழக்கம்போல் உணவருந்தவும், தேநீர் அருந்தவும் வந்த பொதுமக்கள், உணவுக்கான பணத்தை வழங்க முற்பட்டபோது, இன்று உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் உணவு இலவசம் எனக் கூறி திமுகவினர் இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
இந்த வித்தியாசமான ஏற்பாட்டால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் உணவு வழங்க ஏற்பாடு செய்த திமுக நிர்வாகிகளையும் வெகுவாகப் பாராட்டினர்.
சாலையோர உணவகங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான மக்களின் பசியைப் போக்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.