கோவையில் தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு ‘திறல் 2026’ தொடக்கம் – 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

சி.ஏ. மாணவர்கள் அகில இந்திய அளவில் சாதிக்க வேண்டும்; உலகளவில் வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன – ஐசிஏஐ முன்னாள் தலைவர் ஜி. ராமசாமி பேச்சு

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் , கோவை கிளை மற்றும் அதன் மாணவர் அமைப்பான சிகாசாசார்பில், பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான இரண்டு நாள் தேசிய அளவிலான மாநாடு ‘திறல் 2026’ , கோவையில் இன்று தொடங்கியது. நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், நாடு முழுவதிலுமிருந்து 1,300-க்கும் மேற்பட்ட சி.ஏ. மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஜி.ஆர்.டி. அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் முன்னாள் தேசியத் தலைவர் சி.ஏ. ஜி. ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ஐசிஏஐ தென்னிந்திய பிராந்தியக் குழுவின் முன்னாள் தலைவர் சி.ஏ. கே. ஜலபதி கௌரவ விருந்தினராகவும், பிராந்தியக் குழு உறுப்பினர் சி.ஏ. எஸ். ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் ஐசிஏஐ கோவை கிளைத் தலைவர் சி.ஏ. சர்வஜித் எஸ். கிருஷ்ணன், சிகாசா தலைவர் ஹரிஷ்குமார், பிரவீன்குமார், ஐசிஏஐ கோவை கிளைச் செயலாளர் சி.ஏ. லட்சுமி, பொருளாளர் சி.ஏ. கே. முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஐசிஏஐ கோவை கிளைத் தலைவர் சி.ஏ. சுர்வஜித் எஸ். கிருஷ்ணன் கூறியதாவது,

கோவையில் சி.ஏ. மாணவர்களுக்கான தேசிய அளவிலான மாநாடு கடந்த 2010-ம் ஆண்டு முதல், கொரோனா காலகட்டத்தைத் தவிர்த்து, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 13-வது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஐசிஏஐ கோவை கிளையின் கீழ் கோவை, நீலகிரி, உடுமலைப்பேட்டை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர். கோவையில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்களும், 9,000-க்கும் அதிகமான சி.ஏ. மாணவர்களும் உள்ளனர்.

மாணவர்களின் திறன்களையும் ஆற்றல்களையும் வெளிக்கொண்டு வருவதுடன், அவர்களின் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி , செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கணக்கியல் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்து பல்வேறு அமர்வுகளில் விவாதிக்கப்பட உள்ளன.

1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்துக்குப் பதிலாக புதிய வருமான வரிச் சட்டம் 2025 இயற்றப்பட்டுள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெறுகின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பணிகளை மேம்படுத்துவது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற உள்ளன.

சி.ஏ. தேர்வு இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். இத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, பிற திறன்களிலும் தங்களை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த இரண்டு நாள் மாநாடு அமையும். வருமான வரி மற்றும் வணிக வரித் துறைகளுடன் இணைந்து பல்வேறு கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம். கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

உலகளவில் பட்டயக் கணக்காளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் இத்துறையில் இணைந்து வருவது வரவேற்கத்தக்க மாற்றமாகும் என்று தெரிவித்தார்.

மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய ஐசிஏஐ முன்னாள் தேசியத் தலைவர் சி.ஏ. ஜி. ராமசாமி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கணக்கியல் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. சி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. அந்த வாய்ப்புகள் இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை; உலகம் முழுவதும் விரிந்து கிடக்கின்றன. எனவே, மாணவர்கள் தங்களது வாய்ப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கோவையில் தொழில் வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கல்வி நிறுவனங்கள், ஜவுளித் தொழில், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எனப் பல்வேறு துறைகளில் கோவை சிறந்து விளங்குகிறது. இதனால், கோவையில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்திய பட்டயக் கணக்காளர்களை உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களாக உருவாக்க ஐசிஏஐ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் பணியாற்றும் பல தலைமை நிதி அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பது, இந்தியக் கணக்கியல் நிபுணர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்புகள், துறைசார் வல்லுநர்களின் உரைகள் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. முதல் நாளில் தணிக்கை மற்றும் உறுதிப்பாட்டு சேவைகள், வருமான வரி தொடர்பான தொழில்நுட்ப அமர்வுகள், ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இரண்டாம் நாளில் ஜி.எஸ்.டி. தொடர்பான வழக்குக் கள ஆய்வுகள், மனநலம் குறித்த கலந்துரையாடல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விளக்கக்காட்சி அமர்வு ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கே. அண்ணாமலை, ‘ஆன்மிகமும் வெற்றியும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

ஐசிஏஐ கல்வி வாரியத்தின் தலைவர் சி.ஏ. ராஜேஷ் சர்மா மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் இரண்டாம் நாள் சிறப்புரையாற்ற உள்ளார். நவம்பர் 28-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், சி.ஏ. சி.எஸ். சத்யநாராயணன் சிறப்பு விருந்தினராகவும், தென்னிந்திய பிராந்தியக் குழுவின் முன்னாள் தலைவர் சி.ஏ. கே. சண்முகசுந்தரம் கௌரவ விருந்தினராகவும், பிராந்தியக் குழு உறுப்பினர் சி.ஏ. ஏ.வி. அருண் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்க உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *