கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாலின சமத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பாலின சமத்தும் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெண் கல்வியினை மேம்படுத்தல், வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரித்திடவும், பாலின சமத்துவத்தினை நிலைநாட்டும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாலின சமத்துவம் என்பது ஆண்கள். பெண்கள் மற்றும் பிற பாலினத்தவர்களுக்கு சமமான உரிமைகள், பொறுப்புகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கும் நிலையினை ஏற்படுத்துவதே ஆகும். அதனடிப்படையில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பாலினம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் 25.11.2025 அன்று துவக்கப்பட்டு 23.12.2025 வரை மாநிலம், மாவட்டம். வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி அளவில் நடைபெற்று வருகிறது.
“புதிய பெண்களுக்கு எதிரான வண்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு உணர்வு மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0” கையெழுத்து இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது.
“ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் எத்தகைய பாகுபாடுமின்றி சமமாக வளர்ப்போம். வீட்டு வேலைகளை பெண்களும் ஆண்களும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வோம், பெண்கள் விரும்பும் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்போம். அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம். பெண்களின் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்வதை ஊக்குவிப்போம். அனைத்து செயல்பாடுகளிலும் பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதி செய்வோம். அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுவதையும் மற்றும் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதையும் அனுமதியோம். ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பளித்து அச்சமின்றி பயில உறுதுணையாக இருப்போம். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை தடுத்திட பெண் சிசுகொலை மற்றும் கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிவதை தவிர்த்திடுவோம்” என்ற பாலின சமத்துவ உறுதிமொழி நேற்று அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் மகளிர் திட்டம் ஜெய்சங்கர், உதவி திட்ட அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.