சென்னை, ஜூலை 22:

இங்கிலாந்தில் நடைபெற்ற யோனெக்ஸ் ஆல் இங்கிலாந்து யூத் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் கே.ஆர். சுஹாஸுக்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஜூலை 17 முதல் 19 வரை நடைபெற்ற யோனெக்ஸ் ஆல் இங்கிலாந்து யூத் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மூன்று வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், தமிழகத்தின் ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த 15 வயதான கே.ஆர். சுஹாஸ் அண்டர்-19 பிரிவில் விளையாடி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

போட்டியை முடித்து இங்கிலாந்தில் இருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த சுஹாஸுக்கு அவரது உறவினர்கள் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். நண்பர்கள் அவரை தோளில் தூக்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர். சுஹாஸ், “இங்கிலாந்தில் நடைபெற்ற யோனெக்ஸ் ஆல் இங்கிலாந்து யூத் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் சென்று இந்த வெற்றியை பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. போட்டியின்போது சில சிறிய சவால்களை சந்தித்தாலும், அவற்றை கடந்து வெற்றி பெற்றேன். சர்வதேச அளவிலான போட்டியில் பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்துள்ளது,” என்றார்.

மேலும், “எனக்கு அரசு சார்பில் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. அரசு உரிய ஆதரவு வழங்கினால், எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்ல முடியும். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்வதே எனது மிகப்பெரிய இலக்கு,” என்று தெரிவித்தார்.

அத்துடன், “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நான் அவரது ரசிகன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *