தேனி மாவட்டம் 4-ஆவது புத்தகத் திருவிழா – 2025 நடைபெற உள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிகுட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும், பல்வேறு வகையான நூல்கள் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 4-ஆவது புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 4-ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புத்தக அரங்குகள், நுழைவாயில் மற்றும் மேடை அமைப்பதற்கான இடம், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிற்பதற்கான இடம், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடம் அமைத்தல், உணவுப்பொருள் விற்பனை கூடங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் அரங்குகள், கண்காட்சிகள், தற்காலிக கழிவறை மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் போதுமானதாக உள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் குமரேசன், நகராட்சி ஆணையாளர் செல்வி பார்கவி தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் வட்டாட்சியர் சதீஸ்குமார், நூலக கண்காணிப்பாளர் குணசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.