மஞ்சளில் கோ1, பிஎஸ்ஆர் 1,2( பவானி சாகர் 1,2), ஸ்வெர்ணா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா, விரலி மஞ்சள், ஜஜஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஜஜஎஸ்ஆர் கெடாரம் ஆகிய ரகங்கள் உள்ளன. இதில் கோ1, பிஎஸ்ஆர் 1, 2 ஆகியவை தமிழ் நாட்டு இரகங்கள் ஆகும் ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் முக்கிய நாட்டு வகைகள் ஆகும். மஞ்சள் சாகுபடிக்கு ஏற்ற பருவ காலம் வைகாசி முதல் ஆனி வரை சிறந்த பருவம். நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் நிலம் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்றது. நிலத்தை 3 அல்லது 4 முறை உழது பண்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது 10 டன் மக்கிய தொழ உரத்தை மண்ணுடன் நன்கு கலந்து விடவேண்டும். பின்னர் நிலத்தை சமன் படுத்தி 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு 1500- 2000 கிலோ மஞ்சள் விதைகள் விதைப்பதற்கு விரலி மற்றும் கிழங்கு ( குண்டு) மஞ்சளை பயன்படுத்தலாம். விதைப்பதற்கு முன் விதை கிழங்குகளை எமிசான் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிராம் எமிசான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணிரில் கரைத்து,
அதில் விதை மஞ்சளை 10 நிமிடம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இதனால் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். நிலத்திற்கு நீர் பாய்ச்சி விதை மஞ்சளைப் பார்களின் ஓரத்தில் 15 முதல் 20 செ.மீ இடைவெளியில் 4 செ.மீ ஆழத்தில் நடவேண்டும். மஞ்சள் நடவுக்கு முன்பு, நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 200 கிலோ வேப்பம் ( அ) கடலை புண்ணாக்கு, 25:60:108 கிலோ, 30 கிலோ பெரஸ் சல்பேட் மற்றும் 15 கிலோ ஜிங்க் சல்பேட், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை நடவின் போது இடவேண்டும். மேலுரமாக ஹெக்டேருக்கு 25:108 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்தினை, பயிர் நட்ட 30,60,120 மற்றும் 150 வது நாளில் இடவேண்டும். நுண்ணூட்டச் சத்து கலவையை இலை வழி தெளிக்க வேண்டும். அதற்கு சூப்பர் பாஸ்பேட் 15 கிலோவை 25 லிட்டர் தண்ணிரில் கரைத்து ஒரு நாள் இரவு ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலை அந்நீரில் இரும்பு சல்பேட் 375 கிராம், துத்தநாக சல்பேட் 375 கிராம், யூரியா 375 கிராம் சேர்த்து 250 லிட்டர் தண்ணீர் ஊற்றி, இலைகளின் மேல் தெளிக்க வேண்டும். நட்ட 3 வது நாளில் பேஸ்லின் களை கொல்லியை 2 லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும், நடவு செய்த 30 நாளில் முதல் களையும், பின்பு 50, 120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்க வேண்டும். மஞ்சளை தென்னை தோப்புகளில் ஊடுபயிராக பயிரிடலாம். மஞ்சள் தோட்டத்தில் கொத்தமல்லி, வெந்தயம், மிளகாய் பயறு வகைகள் போன்ற பயிர்களை அகன்ற இடைவெளியில் பயிருக்கு தக்கவாறு ஊடுபயிராக பயிரிடலாம். மஞ்சளை சிறிதளவு நிழலிலும் சாகுபடி செய்யலாம். இரண்டாவது மேலுரம் மற்றும் நான்காவது மேலுரம் இடும்போது மண் அணைக்க வேண்டும். கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழிதோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு பதப்படுத்தப்படாத கிழங்குகள் 25-30 டன்கள் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் 5-6 டன்கள் வரை கிடைக்கும் என தெரிவித்தனர்