தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே தென்னைத் தோட்டத்தில் தீ விபத்து: 600 வாழை மரங்கள் சேதம்
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (56), பொன்னுசாமி என்பவரின் மகன். இவர் தனது விவசாயத் தோட்டத்தில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக சுமார் 600 வாழை மரங்களை நடவு செய்து பராமரித்து வந்தார்.
தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பலத்த காற்று காரணமாக வாழை மரங்கள் காய்ந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வீசிய பலத்த காற்றால் காய்ந்திருந்த வாழை இலைகள் மின் கம்பியில் உரசியதால் திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவியதால் தோட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தாராபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ஊடுபயிராக வளர்க்கப்பட்டிருந்த சுமார் 600 வாழை மரங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தொடர்புடைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.