பெரம்பலூர்.டிச.31. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தின் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குச்செல்ல ஏதுவாக பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன் ஆகியோர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்கள்.

கொட்டரை ஊராட்சியில் மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி மதிப்பில் சுமார் 815 ஏக்கர் பரப்பளவில் 212.475 மில்லியன் க.அடி நீர் தேக்கும் வகையில் கொட்டரை நீர்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. 2,360 மீட்டர் நீளம் உள்ள இந்த அணையில் இரண்டு பாசன மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. 9.91 கி.மீ. நீளம் உள்ள இடதுபுற கால்வாய் மூலம் 3,188 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும், 6.73 கி.மீ. நீளம் உள்ள வலதுபுற கால்வாயால் 1,006 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும் பாசன வசதி வழங்குவதால் 4830.38 டன் உணவு உற்பத்தி ஏற்படும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் இடது புற கால்வாய் வழியாக கொட்டரை, ஆதனூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், தொண்டபாடி, அழகிரிபாளையம் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களும் வலதுபுற கால்வாய் மூலம் கொட்டரை, ஆதனுர், கூடலூர் மற்றும் சாத்தனூர் ஆகிய ஊர்களும் பயனடையும். இந்த நீர்த்தேக்கமானது, கொட்டரை, ஆதனூர், சாத்தனூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், கூத்தூர், அழகிரிபாளையம், தொண்டப்பாடி, பிலிமிசை ஆகிய 9 கிராமங்கள் பயனடையும் வகையிலும், சுமார் 4,194 ஏக்கர் பரப்பளவில் விவசாய பாசனம் பெறும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் இந்த அணையில் தண்ணீர் நிரம்பும்போது, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத சூழல் இருப்பதாலும், ஆடு, மாடுகளை ஓட்டி செல்வதற்கு சிரமமாக உள்ளது என்றும் , எனவே சிறு பாலம் கட்டி தருமாறும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அந்தப் பகுதியில் பாலம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா, நில அமைப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடினார். தற்போது அந்த விவசாய நிலங்களுக்குச் செல்ல தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
அரசு விதிகளுக்குட்பட்டு நிதி ஒதுக்கீடு பெற்று விரைவில் பாலம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், வாசுகி, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமரன், மற்றும் நீர்வளத்துறை உதவி பெறியாளர் தினகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *